கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றது.

இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தான் சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபையில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யவும், நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தவும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கவும் திட்டங்களை ரத்து செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

சபையில் பேசிய முதலமைச்சர் மமதான பானர்ஜி, குடியுரிமை சட்டம் மக்களுக்கு விரோதமானது. அந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அதற்காக எனது அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்றார்.