டெல்லி: ஏர் இந்தியா விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார்.
நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவித்தது.
ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. பலரும் ஆர்வமாக இருப்பதால், ஏர் இந்தியா விற்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. இந் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இது தேச விரோத செயல், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று கூறி இருக்கிறார்.