சென்னை: கொரனோ வைரசால் சீனாவில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பெற்றோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சீனாவில் அனைவரையும் அதிர்ச்சி அளித்து, பல உயிர்களை பலி வாங்கி இருக்கிறது கொரனோ வைரஸ். வைரஸ் தாக்குதலால் சீனாவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. யுவாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே 13 இடங்களில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், சீனாவுக்கு சென்றிருக்கும் இந்தியர்கள் கொரனோ வைரஸ் தாக்குதலால் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக யுவாங் நகரத்தில் உள்ளவர்கள் பீதியில் உள்ளனர். இந்தியர்கள் பலர் அங்கு தங்கி கல்வி பயிலுகின்றனர்.
ஏராளமானோர் பல நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் உள்ள அவர்களின் பெற்றோர் கவலையில் இருக்கின்றனர்.
சென்னையில் உள்ள பாளையம் என்பவரின் மகன் சீனாவில் உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது மகனிடம் 2 நாட்களுக்கு ஒரு முறை பேசிவிடுவேன். மருத்துவ மாணவர் என்பதால் அவருக்கு இந்த வைரஸ் பற்றி நன்றாக தெரியும்.
இருந்தாலும் எனது மகனை பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடிக்க சொல்லி இருக்கிறோம் என்றார். குவான்சு மாகாணத்தில் உள்ள தமிழ் சங்க துணை தலைவர் பழனிவேலு கூறுகையில், 400 மருத்துவ மாணவர்கள் உள்பட 1,000 இந்திய மாணவர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்து பாதுகாப்பாக உள்ளனர். அசைவம் சாப்பிடுவதில்லை என்றார்.