திருமங்கலம்: மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 85வது ஆண்டாக பிரமாண்டமாகவும் விமரிசையாகவும் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 10 ஆயிரம் பக்தர்களுக்கு கறி பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியைச் சேர்ந்த சிலர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரை அறியாதவர்கள் கிட்டத்தட்ட இல்லை எனலாம்.
அவர்கள் தாங்கள் கடைபிடிக்கும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில், ஆண்டுதோறும் தை மாதத்தில், தங்கள் குலதெய்வ கோயிலான வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் கடா மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு விருந்தளிக்கின்றனர்.
இந்தாண்டு, பல பகுதிகளிலுமிருந்தும் குழுமிய முனியாண்டி விலாஸ் குடும்பத்தினர் 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு, பக்தர்களுக்கு பிரமாண்ட முறையிலான தடபுடல் பிரியாணி விருந்தளித்தனர்.
சென்டிமென்ட்
பசியோடு வரும் நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உணவளிப்பது பாவம் என்பதால், ஹோட்டலுக்கு ஒவ்வொரு நாளும் வரும் முதல் வாடிக்கையாளரின் பணத்தை உண்டியலில் சேர்த்துவைத்து, ஆண்டுதோறும் தை மாதத்தில் இப்படி பிரமாண்டமான அசைவ விருந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அவர்கள்.
இந்த விருந்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள், ஒருவாரத்திற்கு காப்புக் கட்டி விரதம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.