சென்னை:
நாடு முழுவதும் நாளை குடியரசுத் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஆர்சி, சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஒரு தரப்பினர் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர். சமீபத்தில் கன்னியா குமரி மாவட்டத்தில் ஆயுத கடத்தல் கும்பலை தடுத்த காவல்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறும் சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
விமான நிலையம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட தமிழகம் முழுவதும் கோவில்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.