டில்லி

திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.   அம்மாநில முதல்வராக பிப்லாப் தேப் பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில்  முந்தைய தேர்தல்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இவ்விரு மாநிலங்களிலும் இக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இல்லாமல் இருந்து வந்த நிலையில் இந்த வெற்றி அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.   ஆனால் தற்போது அரசு அமல்படுத்தியுள்ள புதிய குடியுரிமை சட்டத்துக்கு இம்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இம்மாநிலங்களில் பெருகி வரும் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.  முக்கியமாக பாஜகவினர் இந்த மாநிலங்களின் பாரம்பரியத்தை விட்டு விட்டு டில்லி கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை மக்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.   நாட்டின் மிகப் பெரிய கட்சியான பாஜகவினர் இம்மாநிலங்களில் ஒரு அன்னியராக நடந்துக் கொள்கின்றனர்.   இதற்கு முன்பு இந்த மாநிலங்களைச் சேராத தலைவர்கள் நடந்துக் கொண்ட அதே பாணியை இந்த தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர்.

குறிப்பாகத் திரிபுரா முதல்வர் தனது உடை, பேச்சு சமூக வலைத்தள பதிவுகள் உள்ளிட்ட அனைத்திலும் இந்தி கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகின்றனர்.   வேட்டி கலாசாரத்த பின்பற்றிய முந்தைய முதல்வர் மானிக் சர்க்காரின் பாணியில் இருந்து இது  வெகுவாக மாறி உள்ளது    இதே நிலை மேற்கு வங்கத்திலும் நிலவி வருகிறது.  இங்குள்ள தலைவர்களும் வட இந்தியத் தலைவர்களின் பாணியை பின்பற்றி வருகின்றனர்.

பாஜகவினர் இந்த மாநிலங்களில் எழுப்பும் ஜெய் ஸ்ரீராம் என்பதும் இந்தி மொழியில் இருந்து கடன் வாங்கியதாகும்.    இந்த நிலையில் இருந்து  மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு மாறியவர்கள் ஓரளவுக்கு மாறுபட்டுள்ளனர்.  பாஜகவின் இந்தி கலாச்சாரத்தை இந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சியினர்  பெருமளவில் எதிர்த்து வரும் வேளையில் மக்களும் இந்த வழக்கத்தினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் பல வருடங்களாக இடது சாரிகள் ஆட்சி நடந்து வந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் திரிபுராவில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளன.   இதற்கு மற்றொரு காரணம்  இந்த மாநிலங்களில் உள்ள பழங்குடியினரின் வாக்குகள் ஆகும்.   அத்துடன் திரிபுராவில்  இஸ்லாமியர்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.   இவை அனைத்தும் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் ஆகும்.

ஆனால் இவ்வாறு ஆட்சி அமைத்த பிறகு முதல்வரான தேப் பல துறைகளையும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்து அளிக்காமல் தானே வைத்துக் கொண்டுள்ளார்.  இது பாஜகவினருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.  அது மட்டுமின்றி தனது வெற்றிக்குத் துணையாக இருந்த பல உள்ளூர் தலைவர்களை அவர் ஓரம் கட்டி உள்ளதாகவும் டில்லி தலைவர்களுக்கு மட்டுமே மதிப்பு அளித்து வருவதாகவும் பல மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி மேற்கு வங்கத்தில் பல மக்களவை உறுப்பினர்கள் தொகுதி பிரச்சினைகளைக் கண்டுக் கொள்வ்திலை எனக் கூறப்படுகிறது.  தெற்கு வங்கப் பகுதியில் ஒரு உறுப்பினர் இதுவரை தனது அலுவலகத்தைத் திறக்காமல் உள்ளார்.  மத்திய பெண் அமைச்சர் ஒருவர் தனது தொகுதிக்கு வரவே இல்லை என அவர் கலந்துக் கொண்ட நிகழ்வில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.