சென்னை:

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. குறிப்பிட்ட இரு மையங்களில் தேர்வு எழுதி தேர்வான தேர்வர்கள் 99  பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6ஆயிரத்து 491 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர்  எழுதினர்.

இதையடுத்து,  தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாத புரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிபிசிஐடி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  ராமேஸ்வரம் ,கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றது உறுதியான நிலையில், அந்த மையங்கள் மூலம் தேர்வு எழுதியவர்கள் 99 பேரும் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.