தை அமாவாசையும் அபிராமி பட்டரும்
தை அமாவாசைக்கும் அபிராமி பட்டரும் உள்ள தொடர்பைப் பற்றிய விரிவான தகவல் இதோ.
திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்தியான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்குச் சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார். பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார்.
அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்குச் சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார்.
அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாகப் பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார்.
அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.
யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அபிராமிபட்டர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் அம்பாள் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச்சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார்.
கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே அவர் எண்ணி வழிபடுவார். அர்ச்சனைக்காக கைகளில் கொண்டுவரும் மலர்களை அந்தப் பெண்கள் மேல் தூவி மகிழ்வார். அவரது ஞானக் கண்களுக்கு அந்தப் பெண்கள் அபிராமி அம்சமாகவே தோன்றினார்கள். ஆனால் மக்களோ அபிராமி பட்டரை தினம் தினம் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படிப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று கூடச் சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.
அபிராமி பட்டரோ அதைக் காதில் வாங்கவில்லை. யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை. அபிராமியைத் துதிப்பதும், அவளைப் பற்றி துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறுவார். பிறகு அந்த திதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அபிராமி பட்டரின் நித்திய கடமைகளில் ஒன்றாகும்.
இந்தப் பித்தனின் புகழை ஊரறிய, உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டாள் அன்னை அபிராமி!
அதற்கான நாளும் நெருங்கியது. ஒரு நாள் தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி (1675-1728) புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி பூம்புகார் சென்று கடலில் நீராடினார். பிறகு அவர் திருக்கடவூருக்கு அமிர்தகடேசுவரரையும் அபிராமியையும் தரிசனம் செய்ய வந்தார்.
மன்னனைக் கண்டதும் மக்கள் வரவேற்று உபசரித்து வணங்கினார்கள். ஆனால் அபிராமிபட்டர் மன்னர் வந்திருப்பது அறியாமல், மன்னரை வணங்காமல் தனக்குள் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருந்தார். மன்னர், இவர் யார் எனக் கேட்டார், சுற்றி இருந்தவர்கள் மன்னரிடம், மன்னா இவர் பெயர் அபிராமிபட்டர். தினமும் பைத்தியம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். தங்களுக்குத் தர வேண்டிய மரியாதையைக் கூட வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று புகார் கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் சரபோஜி மன்னர் அதைச் சோதிக்க எண்ணினார். புறநினைவு சற்றுமின்றி, தன்னுள்ளே அன்னையைக் கண்டு பரவச நிலையில் அமர்ந்திருந்த அபிராமி பட்டரிடம் நெருங்கிச் சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார்.
மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தைப் பற்றி மட்டுமே எண்ணி யோக நிலையிலேயே கோடி சூரிய பிரகாசமாய் அன்னையைத் தன் மனக்கண்ணில் கண்டுகளித்திருந்த அபிராமிபட்டர் சற்றும் தாமதிக்காமல், இன்று பவுர்ணமி திதி” என்றார். உண்மையில் அன்று அமாவாசை. அதை நினைத்தபடி சரபோஜி மன்னர் அப்படியென்றால் இன்று இரவு பவுர்ணமி நிலவு வருமா? எனக் கேட்டார். அதற்கு அபிராமிபட்டர் நிச்சயம் வரும் எனக் கண்மூடிய நிலையில் கூறினார்.
சரபோஜி மன்னருக்கு கோபம்பொத்துக்கொண்டு வந்தது. இன்று இரவு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை என்றார். இது அரசகட்டளை என்று கூறி விட்டு மன்னர் சென்றார். அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை எல்லாம் மற்றவர்கள் மூலம் கேட்டு உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் கவலைப்பட்டார்.
இந்த தவற்றிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினார். பிறகு அபிராமி சன்னிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார்.
அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்தார். பின்னர் அன்னையை நினைத்தபடி அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.
“உதிக்கின்ற செங்கதிர்” என்று ஆரம்பிக்கும் அந்தாதிப் பாடல்களைப் பாடத்தொடங்கினார். அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். காலை போனது; நண்பகல் சென்றது; மாலையும் வந்தது… பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கை சாயவில்லை! அமாவாசை என்பதால் வானம் இருண்டு உலகமே இருளில் மூழ்கிக் கிடந்தது.
ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று அபிராமி பட்டர் நம்பினார். 78 பாடல்கள் பாடி முடிந்தது. 78 கயிறும் அறுபட்டு விட்டது. மிகுதியாக இருந்த கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது பாடிக்கொண்டே இருந்தார்.
அபிராமிபட்டர் 79வது பாடலாக அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், ”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு” என்ற பாடலைப் பாடினார். அதைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.
தன் காதில் அணிந்திருந்த கம்மலை அன்னை அபிராமி கழற்றி எடுத்து வானவீதியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடியது போல் ஒளியைப் பொழிந்தது. அவள் அபிராமிபட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடு, என்றாள்.
ம்பிகை அருள்பெற்ற அபிராமி பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
அபிராமி பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மகிழ்ந்தார். அபிராமிபட்டரைப் பற்றி பித்தன் என்று கூறியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டனர்.
சரபோஜி மன்னர் அபிராமிபட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அதற்கான பட்டயம் இன்றும் அபிராமி பட்டரின் வாரிசுகளிடம் உள்ளது.
இந்த வருட தை அமாவாசை
விகாரி வருடம் தை திங்கள் 10 ம் நாள் வெள்ளிக்கிழமை (24 .01.2020) தை அமாவாசை அதாவது நாளை தை அமாவாசை ஆகும்.