டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு என்பது ரகசியமானது, அதனை மீறுவது தண்டனைக்குரியது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய சந்தேகங்கள், சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.
கடந்த வாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கூடியது. அந்த கூட்டத்தில், பாஜக அல்லாத சில மாநிலங்கள், புதிய முறைகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பின.
ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் டி,பி குப்தா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களின் பிரதிநிதிகள், நடைமுறைகள் தொடர்பாக சில ஆட்சேபனைகளை தெரிவித்தனர். பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான கேள்விகள் அதில் உள்ளன.
பல பேர் தங்களின் பிறந்த இடம் தெரியாத நிலையில் உள்ளனர். இத்தகைய கேள்விகளின் நோக்கம் என்ன? அவை நீக்கப்பட வேண்டும் என்று கோரினார். அதே நேரத்தில் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந் நிலையில், என்பிஆர் தரவுகள் சேகரிப்பின் போது, எடுக்கப்படும் தகவல்கள் ரகசியமானது, சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுவது, அதை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அரசு கூறியிருக்கிறது.
தரவுகள் பற்றிய ரகசியத்தன்மை 1948ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதே சட்டம் தான் பொதுமக்களும், கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.