நர்வானா: அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், அரியானாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா. நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் காலமானார்.
ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவின் தந்தை ஆவார். விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு பெற்று இந்திய கிஸான் காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.
1967ம் ஆண்டு முதல் 4 முறை நர்வானா தொகுதியிலிருந்தும், 2005ல் ஒரு முறை கைதலிருந்தும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரியானா அரசில் 4 முறை அமைச்சராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: இந்தியாவின் விவசாயிகளின் சேவையிலும் ஹரியானாவின் வளர்ச்சியிலும் அயராது உழைத்த ஒரு பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய காங்கிரஸ்காரரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.