தஞ்சை: சுகோய் போர் விமானம் தஞ்சை படை தளத்தில் இணைக்கப் பட்டதன் மூலம் இந்த வகை போர் விமானம் உள்ள தென்னிந்தியாவின் முதல் படைதளம் என்ற பெருமையை தஞ்சை பெற்றிருக்கிறது.
2013-ம் ஆண்டு முதல் தஞ்சை விமான படை தளத்தில் சுகோய் போர் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. தற்போது தென்னிந்திய பாதுகாப்பு நடவடிக்கையாக படைதளத்தில் சுகோய் 30 MKI என்ற போர் விமானம் இணைக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கான விழா விமானப்படை தள மைதானத்தில் நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி பதோரியா, தஞ்சை விமான படை அதிகாரி பிரஜோல்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய விமானப்படையில் இருக்கும் அதிநவீன ரக போர் விமானமான சுகோய், வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்குவதுடன், வானில் இருந்து தரையிலும் தாக்கும் நடத்தும் வல்லமை பெற்றவை.
ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹால் நிறுவனம் தற்போது இவற்றை தயாரித்து விமானப்படைக்கு வழங்குகின்றன. 2002ல் முதல் முறையாக இவை விமானப்படையில் இணைக்கப்பட்டன.