கவுகாத்தி: குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் ஒரு அம்சமாக அசாம் விவசாயிகள் நெல் நன்கொடை அளித்தனர்.
அசாமில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் சிஏஏக்கு எதிராக போராடி வருகின்றன.
அம்மாநிலத்தில் உள்ள நகார்டியா சட்டமன்ற தொகுதியில் உள்ள விவசாயிகள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகளை நன்கொடையாக அளித்து இருக்கின்றனர். இது சிஏஏக்கு எதிரான போராட்டத்துக்கு தங்களின் ஆதரவு என்று அவர்கள் மாணவர் அமைப்பிடம் கூறி உள்ளனர்.
அதோடு, ரொக்கமாக 80,000 ரூபாயையும் அளித்துள்ளனர். அந்த நன்கொடையை மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளர் லூரின்ஜோதி கோகோய் பெற்றுக் கொண்டார். மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்வு அரங்கேறியது.
அசாமின் பழங்குடி மக்கள் ஒருபோதும் யாருக்கும் முன்னால் தலைவணங்க மாட்டார்கள் என்று லுரின்ஜோதி கோகோய் கூறினார். இது ஒரு எச்சரிக்கை, அசாம் மக்கள் தங்கள் அடையாள பிரச்சினைகளில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்கள்.
சிஏஏ திரும்பப் பெறப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று நாங்கள் உறுதியாக அறிவிக்க விரும்புகிறோம் என்றார்.