டெல்லி:
தலைநகர் டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார்.
ஆனால், தொண்டர்களின் உற்சாகத்தில் சிக்கிய கெஜ்ரிவால், வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரமான பிற்பகல் 3 மணியை கடந்து விட்ட நிலையில், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார். இதனால், நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வதாக கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத்துக்கு வரும் பிப்ரவரி 8ந்தேதி தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 14ந்தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சாலையில் ஊர்வலமாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுடன் சென்றுகொண்டிருந்தார். ஊர்வலம் வால்மீகி கோயிலில் தொடங்கி ஹனுமன் கோயிலில் முடிவடைந்தது. தொண்டர்கள் கூட்டத்தால், அவரால் வேகமாக செல்ல முடியாத நிலையில், ஊர்வலம் குறிப்பிட்ட இடத்தை செல்வதற்கு காலதாமதமானது.
இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அலுவலகம் சென்றார். ஆனால், அதற்குள் மாலை 3மணி ஆகிவிட்டதால், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார்.
இதனால் சோகத்துடன் திரும்பிய கெஜ்ரிவால், தொண்டர்களிடம், இன்று பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்தேன், ஆனால், தேர்தல் அலுவலகம் மாலை 3 மணிக்கு மூடப்பட்டது. நாளை என்னை வேட்புமனு தாக்கல் செய்ய கூறிவிட்டார்கள்…. நான் உங்களை விட்டு விட்டு எப்படி வேட்புமனு தாக்கல் செய்ய முடியும், நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய செல்வேன் என்று தெரிவித்து உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால், 3வது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.