டெல்லி:
பொதுத்தேர்வு குறித்து பயத்தை போக்குவது தொடர்பாக மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரை யாடினார். அப்போது, தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்று அறிவுறுத்தினார்.
10வது மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி இன்று பரீக்சா பே சார்ச்சா (Pariksha Pe Charcha) என்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தோல்விகளில் இருந்தும் படிப்பினைகளை கற்றுக் கொள்ள முடியும் என்றும், அதனால் தோல்விகளை கண்டு துவண்டு போய் விடக் கூடாது. சந்திராயன் 2 திட்டம் தோல்வியடைய வாய்ப்பு இருப்பதாக, முன்னரே தெரிவித்திருந்தும், தான் அதுகுறித்து கவலைப்படாது, சந்திராயன் விண்ணுக்கு ஏவும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் என்றும், அதுபோல, இந்தியா, ஆஸ்திரே லியா அணிகள் இடையே 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் முடிவு குறித்தும் கூறினார்.
பிரச்னைகளை எவ்வாறு எடுத்து கொள்கிறோம் என்பதை இது காட்டுவதாக தெரிவித்த அவர், ராகுல் டிராவிட், லட்சுமண் ஆகியோர் இந்திய அணி பெரும் பின்னடைவில் இருந்தபோது, சிறப்பாக விளையாடி வெற்றி தேடி தந்ததையும் குறிப்பிட்டார்.
தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்று கூறியவர், ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் உத்வேகம் (This is power of positive thinking and motivation) ஆகியவற்றுக்கு இருக்கும் சக்தியே இது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே மக்கள் ஒருவருக்கொருவர் ‘ஜெய் ஹிந்த்’ என்று வாழ்த்துகின்றனர், இது அரிதானது. நீங்கள் அனைவரும் வடகிழக்கு மாநிலம் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களிடையே தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தின் 4 உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்ப்பது பொதுவானது, ஆனால், தற்போது அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொலைபேசிகளில் இருக்கிறார்கள். தொழில்நுட்பம் இல்லாத நேரத்தைப் பற்றி நாம் சிந்திக்க முடியுமா? என்றவர், வீட்டில், சில நேரம், தொழில்நுட்பமில்லாத ஒரு இடத்தை வைத்திருங்கள். இந்த முறையில், தொழில்நுட்பத்தால் நாம் திசைதிருப்பப்பட மாட்டோம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மோடி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.