அபுதாபி
இந்தியா அறிவித்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை அற்றது என வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறியவர்களில் இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க உள்ளது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதை அமல் படுத்த முடியாது என அம்மாநில அரசுகள் அறிவித்து தீர்மானம் இயற்றி உள்ளன. நாடெங்கும் கடும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபி நகருக்கு வந்துள்ள வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஹசீனா,”இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிடவை அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஆகும். ஆயினும் அவற்றை ஏன் இந்தியா கொண்டு வந்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.
தற்போது இந்தியாவில் உள்ள யாரும் வங்க தேசத்துக்குத் திரும்பவில்லை. இந்தியாவின் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைகள் தேவை அற்ற ஒன்றாகும். இந்தியாவில் உறுதி அற்ற நிலை இதனால் ஏற்பட்டால் அது நிச்சயம் அண்டை நாடுகளையும் பாதிக்கும்” எனக் கூறி உள்ளார்.