இன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்

எல்லைக் காந்தி  கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினத்தையொட்டி நெட்டிசன் குன்றத்து முருகராஜ் முகநூல் பதிவு

தனது வாழ்நாளில் ஏறத்தாழ 52 ஆண்டுகள் சிறையில் – வீட்டுக் காவலில் – இருந்தவர் எல்லைக்காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கான் …!!

இன்று அவரது நினைவு தினம் …..

தேசப்பிதாவும் , அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்தி பூர்வமான உறவைப் பேணியவர் கஃபார்கான்.  அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்குப் பலியாயினர். இறந்தவர்களை ஓரமாகக் கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாகப் பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாகத் திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளைப் பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத் தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிம்களின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரைக் கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவாரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார்.

தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தானுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன்  காரணமாய் கஃபார்கான் இந்த ஓட்டெடுப்பைப் புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாகச் சொன்னது :

” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”  என ஆறவொண்ணா மன வருத்தத்துடன் சொன்னார்.

காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்

முகமது அலி ஜின்னாவினால் பலபல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்து கொண்டார்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது.

1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானியத் தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரணமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது.

அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளைச் சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடாது எனச் சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடு பிரிவினைக்குத் தள்ளப்படக்கூடாது என்பதற்காகத் தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கிச் சீரழிவதைப் பார்க்கிறோம்.

எல்லாக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.