சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேசத்தினருக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சென்னை திநகரில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவது சட்டத்திற்கு எதிரானது. அந்த சட்டம், குடியுரிமை கொடுக்கும் சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல.
1964-2008ம் ஆண்டு வரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.
2014ம் ஆண்டு வரை பாகிஸ்தான், வங்கதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. 2016 முதல் 2018 வரை 391 ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள், 1,595 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம், பிரபல பாடகர் அட்னான் சாமிக்கு இந்திய குடியுரிமை வழங்கியது,2016ம் ஆண்டு தான் அவருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது என்றார்.