புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து அக்கட்சியின் எம்.எல்.ஏவும், லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுமான ஆதர்ஷ் சாஸ்திரியின் பெயர் நீக்கப்பட்டதையடுத்து, அவர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுபாஷ் சோப்ரா, ஏ.ஐ.சி.சி பொறுப்பான பி.சி. சாக்கோ மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா முன்னிலையில் சாஸ்திரி கட்சியில் சேர்ந்தார்,
துவாரகா சட்டமன்றத் தொகுதியில் இருந்து மறுதேர்தலில் சீட் தர மறுத்ததால், சாஸ்திரி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் சாஸ்திரியின் பேரன், தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வெளிநாட்டு விவகாரக் குழுவின் இணை கன்வீனர் பதவிகளையும் வகித்திருந்தார்.
2015 தேர்தலில் 59.08 வாக்குகளைப் பெற்று துவாரகா தொகுதியைக் கைப்பற்றியிருந்தார். ஆனால், மறுதேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக, துவாரகா தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மகாபல் மிஸ்ராவின் மகனுமாக வினய் குமார் மிஸ்ராவுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த மறுநாளே அவருக்குத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
சாஸ்திரி, தான் தனது தொகுதியில் கடுமையாகப் பணியாற்றி நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்த்தாகக் கூறினார்.