லண்டன்
பிரிட்டனை விட்டு வெளியேறி கனடாவில் வசிக்கத் தீர்மானம் செய்துள்ள இளவரச்ர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கெல் தங்கள் அரச பதவிகளில் இருந்து விலக உள்ளனர்.
பிரிட்டன் பட்டத்து இளவரசர் மற்றும் மறைந்த டயானாவின் மகன்களில் ஒருவர் ஹாரி, இவர் அமெரிக்க நடிகையான மேகன் மார்கெல் என்பவரை காதலித்து மணம் முடித்தார். அதையொட்டி இருவருக்கும் ராயல் ஹைனஸ் என அழைக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் இருவருக்கும் அரண்மனையில் தலைமை பதவிகள் அளிக்கப்பட்டன.
அரச குடும்பத்துடன் ஒத்துப் போக முடியாத ஹாரி மற்றும் மேகன் அக்குடும்பத்தை விட்டு பிரிய முடிவு செய்தனர். இதையொட்டி தங்களின் பெரும்பாலான நாட்களை கனடாவில் கழிக்க விரும்புவதாக ஹாரி அறிவித்தார். முதலில் இதற்கு அரச குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லை. பிரிட்டன் அரசியும் வில்லியம்ஸ் பாட்டியுமான எலிசபெத் அரசி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது அவர்கள் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்ல எலிசபெத் அரசி ஒப்புதல் அளித்தார். அதையொட்டி ஹாரி மற்றும் மேகன் உடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட ராயல் ஹைனஸ் என்னும் பட்டத்தைத் திரும்ப அளிக்கவும் தாங்கள் வகித்து வந்த அரச பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அரசி எலிசபெத், “கடந்த இரு வருடங்களாக எனது பேரனும் மற்றும் அவர் மனைவியும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயினும் அரச குடும்ப கவுரவத்துக்காக இருவரும் மவுனமாக இருந்தனர். இதற்காக நான் மேகன் மார்கலுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
தற்போது அவர்கள் அரச பட்டம் மற்றும் பதவிகளைத் துறக்க முடிவு செய்துள்ளனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நானும் அவர்கள் பிரிந்து சுதந்திரமாக மகிழ்வுடன் வாழ விரும்புவதை ஏற்றுக் கொண்டு ஆசி அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 ஆம் வருடம் வில்லியம்ஸின் தாய் டயானா தனது கணவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த போது அரச பட்டம் மற்றும் பதவிகளைத் துறந்தது குறிப்பிடத்தக்கது.