சென்னை

ன்று தமிழகத்தில் 43,051 முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் நீர் மாசடைந்து அவற்றை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு போலியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் தொற்றுகிறது    இந்த நோய் தொற்றுதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது.   மூளையையும் தண்டு வடத்தையும் இந்த நோய் தாக்குவதால் குழந்தைகளுக்குப் பக்கவாதம் உண்டாகிறது.

இந்த நோயை தடுக்க சிறு குழந்தைகளுக்குப் போலியோ நோயை தடுக்கும் சொட்டு மருந்து வாய் வழியாகச் செலுத்தப்படுகிறது.  இதற்காகக் கடந்த 1994 ஆம் ஆண்டுமுதல் இந்தியாவில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு  வந்தது.  தற்போது போலியோ அறவே ஒழிந்து விட்டதால் வருடத்துக்கு ஒரு முறை  மட்டுமே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான முகாம் தமிழகத்தில் இன்று நடத்தப்படுகிறது.  இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட உள்ளன.  இவ்வாறு சுமார் 43.051 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்று குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் எனப் பத்திரிகை.காம் கேட்டுக் கொள்கிறது.