டெல்லி:

லைநகர் டெல்லியில், கடந்த 13ந்தேதி முதல் ஏப்ரல் 18ந்தேதி வரை, சுமார் 3 மாதங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது திர்க்கட்சிகளின் குரலை நெரிக்கும் செயல் என கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது வழக்கமான நடைமுறை என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது ஜனநாயக விரோதம் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 8 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 14ந்தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 13ந்தேதி முதல் அங்கு தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதாக கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தேசிய  பாதுகாப்பு சட்டம் ஜனவரி 13ந்தேதி முதல்  ஏப்ரல் 18ந்தேதி வரை சுமார்  3 மாதம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, அங்கு அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, எந்தவித கேள்விகளையும் எழுப்பாமல், அரசியல் விரோதிகள் உள்பட யாரையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்  கைது செய்து, சிறையிலடைக்க டெல்லி போலீஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது…. இது மோடி அரசின் மற்றுமோர் ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய பாஜக அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாகவும்  அரசியல் கட்சியினரால் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள காவல்துறை, இது வழக்கமான நடைமுறைதான் என்றும்,  டெல்லி 3 மாதங்களுக்கு கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது டெல்லியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்:

NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒருவரை கைது செய்தால், அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்காமல் 10நாட்கள் வரை சிறையில் அடைக்கலாம். மேலும்  12 மாதங்கள் வரை அவர்கள் எந்தவித ஜாமினும் பெற முடியாத நிலையில் தடுத்து வைக்கப்படலாம். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவருக்காக வாதாடி வழக்கறிஞர் நியமிக்க முடியாது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் உயர் நீதிமன்ற ஆலோசனைக் குழுவின் முன் மேல்முறையீடு செய்யலாம், ஆனால் விசாரணையின் போது ஒரு வழக்கறிஞரை அனுமதிக்க முடியாது.

மேலும், அவர் / அவள் தேசிய பாதுகாப்பு அல்லது சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என்று அதிகாரிகள் திருப்தி அடைந்தால், அந்த நபரை பல மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்க முடியும். ஒரு நபர் NSA இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

குற்றவாளிகளைத் தண்டிக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஒருவகை. குற்றங்கள் நடப்பதை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மற்றொரு  குண்டர் தடுப்புச் சட்டம்தான் இது.

இந்த சட்டத்தின்படி,  ஒருவருடைய நடவடிக்கைகள் (அவருடைய எழுத்தும் பேச்சும் செயல்பாடுகளும்) இந்திய இறையாண்மைக்கு, இந்திய ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்குமானால் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்…

மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கும்  நோக்கில் இந்த சட்டத்தை டெல்லியில் அமல்படுத்தி உள்ளது…