டெல்லி:
பிரதமர் மோடிக்கு குடியுரிமை இருக்கா? என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேரளாவைச் சேர்ந்தவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளும் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கேரளா மற்றும் பஞ்சாப் சட்டமன்றங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.