கோழிக்கோடு: கேரளாவில் உள்ள குட்டியாடி நகரத்தில் சிஏஏ வுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களுக்கு எதிராக வெளிப்படையான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோழிக்கோட்டின் குட்டியாடி நகரம் வழியாக ஆண்களின் பேரணி ஒன்று சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவைப் பெறுவதற்காக என்று தோற்றமளிக்கும் வகையில் அணிவகுத்துச் செல்வதைக் காணலாம். பாஜகவின் சின்னமான தாமரையுடன் பல காவிக் கொடிகள் கூட்டத்தில் தென்படுகின்றன. இருப்பினும், உன்னிப்பாகக் கேட்கும்போது, எதிர்ப்பாளர்கள் சிஏஏ சார்பு கோஷங்களை எழுப்பவில்லை. மாறாக, அவர்கள் முஸ்லிம்களுக்கு வெளிப்படையான வன்முறை அச்சுறுத்தல்களை எழுப்புவதைக் கேட்க முடிகிறது.
“குஜராத்தை மறந்துவிடாதீர்கள். நீங்கள் விளையாடுவதற்கு முன்பு அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று பேரணியினர் ஒற்றுமையாகக் கூச்சலிடுவதைக் கேட்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2002 ல் மாநில முதல்வராக பணியாற்றியபோது, கிட்டத்தட்ட 800 முஸ்லிம்களைக் கொன்ற குஜராத் கலவரத்தை இவர்களின் இனவாத முழக்கங்கள் குறிப்பிடுகின்றன.
13ம் தேதியன்று மாலை 5 மணிக்கு கோழிக்கோட்டில் பாஜக ஏற்பாடு செய்திருந்த ‘நாட்டைக் காப்பாற்று’ பொதுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரணியின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வீடியோக்களில் கோஷங்கள் எழுப்பப்படுவதை டி.என்.எம் கேட்டது, அவற்றில் பெரும்பாலானவை பற்றி எழுத முடியாது.
உள்ளூர் ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, பா.ஜ.க போராட்டக்காரர்களால் வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. அக்கம் பக்கத்திலுள்ள பல கடைக்காரர்கள், பாஜக ஏற்பாடு செய்திருந்த பேரணியைப் புறக்கணிப்பதற்காகத் தங்கள் கடைகளை மூடிவிட்டிருந்தனர். இந்த கூட்டத்தை மாநில பாஜக பொதுச் செயலாளர் எம்.டி.ரமேஷ் ஒருங்கிணைத்து அதனைத் துவக்கி வைத்தார்.