டில்லி
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டுப் பலாத்காரக் கொலையில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறைச்சாலையில் தற்கொலை செய்துக் கொண்டார். மீதமுள்ள ஐவரில் ஒருவர் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். நால்வருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நால்வருக்கும் வரும் 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையைக் குறைக்க ஜனாதிபதிக்கு அளித்த கருணை மனு நிலுவையில் உள்ளதால் குற்றவாளிகளைத் தூக்கில் இட முடியாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி மாளிகையில் வெளியான அறிவிப்பில் முகேஷ் சிங் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.