டில்லி
அமெரிக்கத் தொழிலதிபரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசாஸ் அறிவித்துள்ள ரூ.7100 கோடி ( ஒரு பில்லியன் டாலர்) முதலீட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசான் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்ததில் இருந்து உலகின் முதன்மை ஆனலைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று அமேசான் நிறுவனர் ஜெப் பிசாஸ் இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார்.
ஜெப் பிசாஸ் ஒரு நிகழ்வில் பேசுகையில் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்க அமேசான் ரூ.7100 கோடி அதாவது ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். இது மக்களிடையே இரு வகை கருத்துக்களை உண்டாக்கி உள்ளது. ஒரு சிலர் இது இந்தியாவுக்குச் சாதகமானது எனக் கூறி வருகின்றனர். ஆனால் வேறு சிலர் அமேசான் நிறுவனம் நஷ்டத்தைச் சரி செய்ய இங்கு முதலீடு செய்வதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “மக்களிடம் சட்டத்தின் சொற்கள் மற்றும் நோக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் எனப் பல முறை கூறி உள்ளேன். தயவு செய்து யாரும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டறிய முயற்சி செய்யாதீர்கள். அமேசான் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அதாவது ரூ.7100 கோடி முதலிட்டுசெய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் இதனால் ரூ.7100 கோடியை இழந்தால் அதன் பிறகு நாம் ரூ.7100 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும். ஆகவே அவர்கள் அளிக்கும் முதலீடு என்பது இந்தியாவுக்குப் பெரிய உதவியாக இருக்காது. இதனால் அதை முதலீடு எனக் கருத முடியாது. மாறாக ஏமாற்று வேலை எனத் தான் தெரிவிக்க முடியும்” எனக்கூறி உள்ளார்.