மதுரை:
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு தற்போது (17-01-2020) பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஜல்லிக் கட்டு போட்டியில், 700 காளைகள் கலந்துகொள்ளும் நிலையில், அதை பிடிக்க 921 மாடுபிடி வீரா்களும் கலந்துகொள்கின்றனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு வழங்கப்பட உள்ளது.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப்போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி காலம் காலமாக நடைபெற்ற வருகிறது. ஜல்லிக்கட்டுப்போட்டி தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.
இன்று அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கியது. மிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மறுரும் அதிகாரிகள் போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வெளிநாட்டினர் உள்பட நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், செய்தியாளா்கள் என தனித்தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாா்வையாளா்கள் பகுதிக்குள் காளைகள் சென்றுவிடாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை. தொடர்ந்து பரபரப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரா், சிறந்த காளைக்கு தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் சாா்பில் காா் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டியின்போது, மாடு முட்டுவதால் காயம் அடைபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினா், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, காளைகளுக்குச் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவக் குழுவினரும் முகாம் அமைத்துள்ளனா்.