டில்லி

கில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த சில நாட்களாக வங்கிகளுக்கு சில கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.   அவற்றில் சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், குடும்ப ஓய்வூதிய முறையை மேம்படுத்துதல், ஐந்து நாள் வங்கிச் சேவை, லாபத்தின் அடிப்படையில் பணியாளர் நல நிதியை ஒதுக்குதல், ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு, முறைப்படுத்தப்பட்ட ஒரே பணி நேரம், மதிய உணவு இடைவேளை, வங்கி விடுப்பு முறை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் ஒப்பந்த ஊழியருக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம், 20 சதவீத ஊதிய உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது.  அதையொட்டி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வேலை நிறுத்தத்துக்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனில் வரும் மார்ச் 11, 12 மற்றும் 13 தேதிகளில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.