டில்லி

நிர்பயா கூட்டு பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் வரும 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 23 வயதான மருஹ்ட்துவமாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.  அதன் பிறகு அவர் பேருந்தில் இருந்து வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.  தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.    இந்த செய்தி இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கியது.

இந்த குற்றம் தொடர்பாக ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவயது இளைஞர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.   இதில் ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டு உயிர் இழந்தார்.  மீதமுள்ளவர் மீது நடந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு டில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பின் படி அந்த சிறுவயது இளைஞருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் மற்ற நால்வருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டது.   இதை எதிர்த்துப் போடப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.   இதையொட்டி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வரும் 22 ஆம் தேதி அன்று இந்த நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதையொட்டி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை அளிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி அளித்த கருணை மனு நிலுவையில் உள்ளதால் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.  அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் சங்கீதா திங்கரா முன் விசாரணைக்கு வந்த போது  அரசு தரப்பில் கருணை மனு மீதான பதில் வரும் வரை நால்வரின் தூக்குத் தண்டனையையும் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.   இது குறித்து நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, “முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ய வேண்டும்.   அந்த நால்வருக்கும் தூக்குத் தண்டனை குறித்த தேதியில் நிறைவேற்றப்பட வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.