மும்பை

ரும் 26 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு ரூ.10 விலையில் சிவபோஜன் சாப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் உணவுகளை வழங்கத் தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது,  இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத்தொடர்ந்து ஆந்திராவில் ‘அண்ணா கேண்டீன்’ தொடங்கப்பட்டது.   தற்போது அண்ணா கேண்டீனில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்பட்டு அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் புதிய பொலிவோடு இத்திட்டம் தொடங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தொடங்கப்படவில்லை.

தற்போது மகாராஷ்டிராவில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு மலிவு விலையில் மதிய சாப்பாட்டை வழங்கக்கூடிய ‘சிவபோஜன்’ உணவுத் திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 26 முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

சாகன் பூஜ்பால்

மகாராஷ்டிர மாநில  உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் சாகன் பூஜ்பால் இது பற்றி தெரிவிக்கையில், “ஜனவரி 26 முதல்  ரூ 10 ‘சிவ்போஜன்’ உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது   சிவ்போஜன் என்னும் இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் நல்ல சாப்பாடு வழங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சிவ்போஜன் உணவுத் திட்டத்தின்கீழ் ஒரு சாப்பாடு ரூ.10க்கு வழங்கப்படும்.  இந்த சிவ்போஜன் திட்டத்தை அமல்படுத்தப் பெண்களின் சுய உதவிக்குழுக்களை நியமிக்க மாநில அரசு விரும்புகிறது. அத்துடன் பதிவுகளைப் பராமரிக்க மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவ ஒரு சிறப்பு மென்பொருளை அரசாங்கம் தயாரிக்க உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை மாநிலத்தில் பல இடங்களிலும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவ்போஜன் திட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களிலும் தொடங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.