டில்லி

வகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வழக்கில் ஆர் எஸ் எஸ் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களின் மொபைலை பறிமுதல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.    அவ்வகையில் கடந்த 5 ஆம் தேதி அன்று டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.   அதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காயம் அடைந்தனர்.  இது ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் திட்டமிட்ட தாக்குதல் எனப் பேராசிரியர்கள் புகார் எழுப்பினார்கள்.

இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் அமீத் பரமேசுவரன், அதுல் சூட், சுக்லா வினாயக் சாவந்த், ஆகியோர் அளித்த புகாரில் இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே ”ஆர் எஸ் எஸ் நண்பர்கள்”  மற்றும் ”இடது சாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” ஆகிய வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் பரப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.  இந்த வழக்கு விசாரணை டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி பிரிஜேஷ் சேத்தியின் விசாரணைக்கு வந்தது.  அப்போது அவர்கள் புகாரில் அளிக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்ட செய்திகளை நீதிபதி ஆய்வு செய்தார்.  அதன் பிறகு டில்லி காவல்துறைக்கு இந்த இரு குழு உறுப்பினர்களின் மொபைல்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.