டில்லி
பொருளாதார மந்த நிலையால் இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் குறையும் என ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் கடும் மந்த நிலையில் உள்ளதாகப் பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாட்டில் வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல இனங்களில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்த மந்த நிலையால் மக்களிடையே பணப் புழக்கம் பெருமளவில் குறையக் கூடும். அத்துடன் குறைந்த வருமானம் பெறுவோரின் வேலை வாய்ப்பு பெருமளவில் பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மாதம் ரூ.15000க்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரின் வேலை வாய்ப்புக் குறித்து பாரத ஸ்டேட் வங்கி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 89.7 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. அந்த எண்ணிக்கை இந்த 2020 ஆம் ஆண்டில் 73.9 லட்சமாகி சுமார் 15.8 லட்சம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் மாநில, மத்திய அரசு வேலை வாய்ப்பு, ஓய்வூதிய வாய்ப்புள்ள வேலை வாய்ப்புக்கள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இந்த இனங்களில் இந்த வருடம் புதிய வேலை வாய்ப்புக்கள் எண்ணிக்கை 39000 பேர் வரை குறையலாம் என கூறப்ப்ட்டுள்ள்து. இதில் பெரும்பாலானோர் அசாம், பீகார், ராஜஸ்தான், ஒரிசா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்பவர்கள் ஆவார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் பொய்த்துப் போனதால் வேறு வேலை தேடி தங்கள் மாநிலங்களை விட்டு இடம் பெயருகின்றனர். இவர்கள் அதிக அளவில் டில்லி நகரில் பணி புரிந்து வருகின்றனர்.
பல நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மூடும் நிலையில் உள்ளதால் இந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த மக்களில் பெரும்பாலானோர் தங்கள் ஊதியத்தை தங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது இவர்கள் பணி இழக்கும் அபாயம் உள்ளதால் அந்த மாநிலங்களின் வருவாய் குறையக்கூடும் எனக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.