டெல்லி:
நடிகை தீபிகா படுகோனே அரசியல் பிரச்சினைகள் குறித்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், அதற்காக தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 5ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஜேஎன்யு கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்களை சந்தித்து பிரபல நடிகை தீபிகா படுகோனே ஆதரவு தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தீபிகா தனது படத்தை வெற்றிப்படமாக்கவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகாகுரு பாபா ராம்தேவ், குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து பேசினார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தான் ஆதரிப்பதாக தெரிவித்தவர், சிஏஏக்கு எதிராக பேசுபவர்களையும் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசியவர், நடிகை தீபிகா படுகோனே ஜேஎன்யு மாணவர்களை சந்தித்தது குறித்து விமர்சித்தவர், அவர், எந்தவொரு “பெரிய முடிவுகளையும்” எடுப்பதற்கு முன்னர் நாட்டில் உள்ள சமூக-அரசியல் பிரச்சினை களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் அரசியல் படிக்க என்னைப் போன்றவர்களை ஆலோசகர் களாக நியமிக்க வேண்டும், எங்களைப் போன்றவர்கள், முக்கியமான பிரச்சினைகள் குறித்து “நியாயமான பார்வையை” அவர்களுக்கு சொல்லித் தருவோம் என்று கூறினார்.
“ஒரு நடிகையாக தீபிகாவின் செயல்திறன் வேறுபட்டது. இருப்பினும், அவர் முதலில் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பிரச்சினைகளைப் படித்து, நம் நாட்டைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவைப் பெற்ற பிறகு, அவர் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று விமர்சித்தவர், CAA இன் முழு வடிவம் கூட தெரியாதவர்கள் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான கருத்துக்களை பயன்படுத்துகின்றனர் என்று சாடினார்.
“பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்தச் சட்டம் குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, மாறாக அதை வழங்குவதற்காகவே என்று கூறியுள்ளனர், ஆனால் சிலர் இன்னும் அந்த சட்டத்தின் மீது வன்மம் காட்டி வருகின்றனர் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) சிலர் குழப்பத்தை உருவாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
“அவர்கள்‘ ஜின்னா வாலி ஆசாதி ’என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். இந்த முழக்கம் எங்கிருந்து வந்தது? இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் மற்றும் அதன் நிறுவனங்களின் பிம்பத்தை கெடுக்கின்றன, ”என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இரண்டு கோடி மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக கூறிய ராம்தேவ், “எந்த நாட்டையும் ஒரு குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சட்டவிரோத குடிமக்கள் யாரும் இந்தியாவில் வாழ அனுமதிக்கக்கூடாது. முன்மொழியப்பட்ட என்.ஆர்.சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு ஏதேனும் மாற்று திட்டம் இருந்தால், அவர்கள் அதை முன்வைக்க வேண்டும்.
ஜனநாயகம் வலுவாக இருப்பதற்கு ஆளும் கட்சியைப் போலவே எதிர்க்கட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்றவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (போக்) இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.