புதுடெல்லி: 5 நாள் டெஸ்ட் போட்டி என்பது அழகிய காதல் கதைப் போன்றதென்றும், எனவே அந்தக் கதையில் தேவையற்ற திருப்பமாக அதை 4 நாட்களாக குறைக்கக்கூடாதெனவும் சுவைபடக் கூறியுள்ளார் இந்திய முன்னாள் அதிரடி மன்னன் சேவக்.
டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக மாற்றுவது என்ற ஐசிசி அமைப்பின் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவக், அந்த எதிர்ப்பையே சற்று கவிதைத்தனமாக பதிவுசெய்துள்ளார்.
சேவக் கூறியுள்ளதாவது, “மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அதிகமான ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்க்க உதவுகிறது. ஆனால், டெஸ்ட் போட்டியின் மாற்றங்கள் என்பவை 5 நாட்கள் என்ற அடிப்படையை மாற்றாமல் இருக்க வேண்டும்.
அதனை ஒருபோதும் 4 என்பதாகக் குறைக்கக்கூடாது. அப்படி செய்வது தண்ணீரிலிருந்து மீனை வெளியே எடுத்துப் போடுவதற்கு சமமானதாகும். 5 நாட்கள் டெஸ்ட் என்பது அழகிய காதல் கதைப் போன்றது.
பேட்ஸ்மேனை வீழ்த்த பவுலர் வியூகம் வகுப்பது, பவுலரை ஏமாற்றி பேட்ஸ்மேன் நிலைத்து நிற்பது, காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் காதலியைப் போன்று, ஸ்லிப் பகுதியில் கால்கடுக்க ஃபீல்டர் நின்றிருப்பது உள்ளிட்ட நிறைய சுவாரஸ்யங்கள் இதில் உள்ளன.
142 ஆண்டுகள் ஆகிவிட்டாலும்கூட, டெஸ்ட் போட்டி என்பது இந்திய அணியைப்போன்று இளமையாகவும் உறுதியாகவும் உள்ளது. எனவே, அதற்கென்று உள்ள ஆன்மாவை ஒருபோதும் சிதைத்துவிடாதீர்” என்று தெரிவித்துள்ளார் வீரேந்திர சேவாக்.