ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் காரணமாக, இரு மாவட்டங் களில் இணையதள சேவை முடககப்பட்டு உள்ளது. கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில், நிர்மல், ஆதிலாபாத் உள்பட சில மாவட்டங்களில் இணையம்தள சேவை, சமூக வலைதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுளள்ன.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிர்மல் மாவட்டத்தின் பைன்சா பகுதியில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து, நேற்றும் மோதல் தீவிரமடைந்தது. மோதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி, மோதல் அதிகரித்த நிலையில், தொலைத்தொடர்புத் துறையால் நிர்மல், ஆதிலாபாத், மஞ்சேரியல், ஆசிபாபாத் மற்றும் பிற பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.
பைன்சா பகுதியில் உள்ள கோரவள்ளி கிராமத்தில் இரு பிரிவினர்களுக்கு திடீரென மோதல்கள் வெடித்தன, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பைக் சைலன்சர்களை அகற்றி மற்றொரு பகுதிக்குச் சென்று தொல்லைகள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இந்த வன்முறையில் பல பைக்குகள் மற்றும் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த, போலீசார் லத்தி சார்ஜ் செய்து வன்முறைகளை அடக்கினர். இதில் சில காவல் துறையினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. மேலும் மோதல்களைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வன்முறைக் காரணம் அசாதுதீன் ஒவைசியின் கட்சிதான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஓவைசி கட்சியினரோ, இது திட்டமிட்ட வன்முறை என்றும், குற்றவாளிகளை கைது செய்து நீதி வழங்க வேண்டும் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறத்தி உள்ளார்.
இந்த நிலையில், தொலைதொடர்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் தங்களது இணையதள சேவைகளை மட்டுமே முடக்கி உள்ளது.ஆனால், வாய்ஸ் சேவை தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து கூறிய நிர்மல் மாவட்ட கலெக்டர், மாவட்ட நிர்வாகம் தரப்பில் இணையதள சேவை முடக்க கோரிக்கை வைக்கப்படவில்லை என்றும், மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடக்க உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது என்று கூறி உள்ளது.
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.