சென்னை:
சென்னை புத்தகத் திருவிழா அரங்கில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைசெய்யக்கூகூடாதென்றால் சமையல் குறிப்பு புத்தகங்களைக் கூட வைக்கக் கூடாதே?, அதில், வெங்காயம், உப்பு போன்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான தகவல்கள் இடம்பெற்றுள்ளதே என்று கம்யூ. எம்.பி. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை புத்தக்கண்காட்சியில், அரசுக்கு எதிரான புத்தகங்கள் காட்சிக்கு வைத்து விற்பனை செய்ததாக பத்திரிகையாளர் அன்பழகனின் மக்கள் செய்தி மையம் அரங்கு வெளியேற்றப்பட்ட நிலையில், அன்பழகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கண்காட்சி அரங்கில் நடைபெற்று வரும் நேற்றைய நிகழ்ச்சியில், கீழடியில் ஈரடி’ என்ற தலைப்பில் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் பேசுவதாக இருந்தது.
ஆனால், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கும், அவரது புத்தகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக, தான் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசப்போவதில்லை என்று தெரிவித்த வெங்கடேசன், “தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் – விற்பனையாளர் சங்கத்திற்கு (பபாசி) என தனித்த மாண்புகள், கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அரசை விமர்சித்தாக காவல்துறை கூறலாம், அரசு கூறலாம். ஆனால் அதை பபாசி கூற கூடாது.
அரசை விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணாவின் நூல்கள் விற்கக்கூடாது. சமையல் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது. வெங்காயம் இருக்கு அது மத்திய அரசுக்கு ஆகாது . உப்பு பற்றி எழுதியிருக்கும் அது தமிழ்நாட்டு அரசுக்கு எதிரானது . கீழடி பற்றியே பேச முடியாது.
கீழடி என்றாலே மத்திய அரசுக்கு எதிரான சொல்தான். ஆனால், கீழடி தொடர்பாக ஒரு அரங்கமே இருக்கிறது. அதை எதிர்க்க முடியுமா? எனவே பபாசியின் நடவடிக்கையை கண்டித்து எனக்களித்த கீழடி ஈரடி தலைப்பில் உரையாற்ற மறுத்து என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
வெங்கடேசன் எம்பியின் பேச்சு புத்தக் கண்காட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.