திருப்பதி : பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு அழைத்த குற்றச்சாட்டு எதிரொலியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி ராஜ் தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் தலைவராக பிரபல நகைச்சுவை நடிகர் பிருத்வி ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஒரு தொலைபேசி உரையாடலும் வெளியானது. அதில் அந்த பெண்ணிடம் பேசும் விவகாரங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து இந்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்தது.
ஏஐடியுசி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பிருத்வி ராஜை திருமலை திருப்பதி தேவஸ்தான் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுமாறு ஜெகன் மோகன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அவர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரத்துக்கும், தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அந்த தொலைபேசியில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.