விக்டோரியா:
கடந்த 3 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பற்றியெரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், ஒருவாரம் கனமழை பெய்யும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இதை சமூக ஆர்வலர்களும், தீயணைப்பு துறையினரும் வரவேற்றுள்ள நிலையில், இந்த கனமழை காரணமாக காட்டுத்தீ அடியோடு அணைந்து போகும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதே வேளையில், வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையால், வனப்பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடந்த 3 மாதமாக பரவி வரும் புதர் தீயின் தாக்கத்தால், இதுவரை 28 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், சுமார் 2 ஆயிரம் வீடுகள் மற்றும் 75 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நிலங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளதாக அந்நாடு அறிவித்து உள்ளது.
மேலும் இந்த பகுதியில் வசித்து வரும் சுமார் 50 கோடி விலங்குகள் பலியாகி உள்ளதாக சிட்னி பல்கலைக் கழக ஆய்வுகள் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். அழிந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கங்காரு, கரடி போன்ற அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் விலங்கின ஆர்வலர்களும், பிராணிகள் நலத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருபுறம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தீயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கு உணவு வழங்கும் பணி ஹெலிகாப்டர் உதவியுடன் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வானிலை மையம், நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா போன்ற பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என்று கணித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், அது தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டது.
இந்த வரைபடம் மாநில கிராமப்புற தீயணைப்பு சேவையால் மீண்டும் டிவீட் செய்யப்பட்டது: இந்த வானிலை முன்னறிவிப்பு தங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள தீயணைப்பு வீரர்கள், ‘இந்த மழைப்பொழிவு முன்னறிவிப்பு பலனளித்தால், து எங்கள் கிறிஸ்துமஸ், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா, திருமண மற்றும் பட்டமளிப்பு பரிசுகள் அனைத்தும் ஒன்றாக மகிழ்ச்சிகரமாகும் என்றும் என்று தெரிவித்து உள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு படி, இன்று சவுத்வேல்ஸ் பகுதியின் மத்திய மற்றும் வடக்கு கடற்கரைகளின் பைகளில் மழை பெய்யும் என்றும், வரும் வியழாக்கிழமை அன்று இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக மழையைக் காணாத சிட்னியில் வானிலை அறிவிப்புபடி பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், வரும் வியாழக்கிழமை 2-8 மி.மீ மழை பெய்யலாம் என்றும், வெள்ளிக்கிழமை 5-10 மி.மீ. மழை பெய்ய வாப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கூறியுள்ள வானிலை ஆய்வாளர் கேப்ரியல் உட்ஹவுஸ், இந்த மழை மிகவும் கனமழையாக இருக்கக்கூடும் என்றும், அதே வேளையில் கனத்த மழை நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளார். இடியுடன் கூடிய நல்ல மழையை கடந்த ஓரிரு நாட்களாக நாங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியவர், தற்போது அதற்கான சூழல் உருவாகி உள்ளது, வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பலத்த மழை கொட்டும் என்று தெரிவித்தவர், ‘இது மிகவும் வரவேற்கத்தக்கது, ஆனால் அதனால் ஏற்படும் நிலச்சரி போன்றவற்றால் கூடுதல் ஆபத்துகள் மற்றும் அபாயங்கள் உள்ளன, ஏனெனில், வனப்பகுதிகள் தற்போது தீயின் சேதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, தீ சேதத்தால் ஏற்கனவே ஏராளமான தாவரங்கள், மரங்களை இழந்துவிட்டோம், இந்த நிலையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.’ என்று கூறி உள்ளார்.