மும்பை: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) சார்பில் சிறந்த வீரருக்கான விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2018-19 ஆண்டுக்கான பாலி உம்ரிகர் என்ற பெயரிலான விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா, அடுத்தடுத்த நாட்களில் தனது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணியில் ஆதிக்கம் பெறத் துவங்கினார்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கடைசி ஓவர்களில் எகானாமிக்காக பந்து வீசுவதிலும், தேவையானபோது யார்க்கர் பந்துகளை வீசுவதிலும் கெட்டிக்காரராக திகழ்கிறார் பும்ரா.

பும்ரா தவிர, வீராங்கனைகள் பூனம் யாதவ் மற்றும் அஞ்சும் சோப்ரா போன்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.