டொரான்டோ: உக்ரைன் நாட்டு விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் கனடா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே சச்சரவு வெடித்துள்ளது.
ஏனெனில், அந்த உக்ரைன் விமானத்தில் பலியானவர்களில் 63 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினையை கனடா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
மேலும், உக்ரைன் அரசு இந்த விஷயத்தில் கனடா அரசின் உதவியை நாடியுள்ளது. ஏனெனில், உலகில் நடைபெறும் விமான விபத்துக்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக மேற்கொள்ளும். அதற்காக அந்நாட்டில் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவினர் உள்ளனர்.
தனது நாட்டுப் பிரஜைகளுடைய உயிர் மற்றும் தனிமனித உரிமைகள் விஷயத்தில் சற்று அதிகமாகவே அக்கறை செலுத்தும் நாடாக உள்ளது கனடா! எனவே, அந்நிய நாடு ஒன்றின் தவறால், தன் நாட்டுப் பிரஜைகள் 63 பேர் காரணமின்றி, அநியாயமாக பலியாகியுள்ளதை அந்நாடு நிச்சயம் எளிதாக எடுத்துக்கொள்ளாது என்கின்றனர்.
இதனால்தான், “உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது கடும் கண்டனத்திற்குரியது. எங்களின் மக்கள் 63 பேர் பலியாகியுள்ளனர். நாங்கள் இதனை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இதற்கு ஈரான் பதில் சொல்லியே ஆகவேண்டும். இதற்கான விசாரணையையும் நாங்கள் துவக்கியுள்ளோம்” என்று காட்டமாக கூறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ.