சென்னை: சமீபகாலத்தில் அதிகமாக எழுந்துவரும் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் குறிப்பிட்ட மையங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மட்டும் முன்னிலைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுதொடர்பாக தற்போது விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
எனவே, எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தேர்வு நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நீட் தேர்வு நடைமுறையில் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் போன்று அமல்செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.