மூத்த காங்கிரஸ் தலைவரும், பல்வேறு பாசன கால்வாய்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவருமான மூத்த அரசியல்வாதியும், சமூகசேகருமான திருச்செங்கோடு டி.எம்.காளியண்ணன் இன்று தனது 100வது நாளில் காலடி எடுத்து வைக்கிறார்.
1921ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந்தேதி பிறந்த டி.எம்.காளியண்ணன் டி.என்.குமரமங்கலம் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசியல்வாதி மட்டுமின்றி மிகச்சிறந்த சீர்திருத்தவாதி. சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டமும், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (ஆங்கில இலக்கியத்தில்) கல்வி பயின்றவர்.
இந்தியன் வங்கியில் பணியாற்றி இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர்.
1942 ஆம் ஆண்டில் மகாத்மாகாந்தி தொடங்கிய க்விட் இந்தியா இயக்கத்தில் பங்கேற்று நாட்டின் சுதந்திரத் திற்காக முதன்முதலாக பொதுவாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார். மகாத்மா காந்தி, ராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி, காந்தி போன்ற தலைவர்கள் மீது கொண்ட அன்பினால், மக்கள் சேவையில் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத சூழலில், 1948-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 40 பேரில், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எம். காளியண்ணனும் ஒருவர்.
கல்லூரி மாணவராக இருந்த போதே அரசியல் ஈடுபாடு காரணமாக வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்தில் தங்கி காந்தியடிகளுடன் 12 நாட்கள் சேவை செய்து அவரிடம் பயிற்சியும் பெற்றுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணகி விழாவை திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து நடத்தி வரும் பெருமை காளியண்ணனையே சேரும்.
அவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இதுவரை சுமார் 2ஆயிரம் பள்ளிகளை தோற்றுவித்து அந்த பகுதி மக்களுக்கு கல்வி அறிவை புகட்டியுள்ளார்.
தனது மாவட்ட விவசாயிகளுக்காக போராடி காவிரி நீர்பாசன உரிமையை பெற்று தந்தவர்.
மேட்டூர் கிழக்குக் கரை, மேற்கு கரை பகுதிகளில் சுமார் 45ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நீர்பாசன வாய்க்கால் அமைத்தவர்,
மாவட்ட மக்களின் பயனுக்காக பள்ளிப்பாளையம், பவானி காவேரி பாலத்தை கட்டியவர்.
அந்த பகுதி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மோகனூர் சர்க்கரை ஆலை, சங்ககிரி சிமென்ட் ஆலை, சேஷா காகித ஆலை போன்றவைகரளை தனது மாவட்டத்துக்கு ஏற்படுத்தி கொடுத்தவர்.
நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் உள்ள கொல்லி மலைகள் வழியாக கொல்லி மலை சாலை அமைக்கப் பட்டது. சமார் 70 ஹேர்பின் வளைவுகளுடன் அந்த சாலை அமைக்கப்பட்டது பெரிய சாதனையாக பேசப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில், மலைப்பகுதியை மட்டுப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.
ஏராளமான நீர்பாசனத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியதோடு பல கால்வாய்களை ஏற்படுத்தி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை விளை நிலங்களாக மாற்றியுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், விவசாயிகளுக்காக கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகளின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர்.
தனது சொந்த நிலத்தில் பெரும்பகுதியை கல்வி நிலையங்கள்,கோவில் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் தந்துள்ளார்.
தீவிர கல்வியாளரான காளியண்ணன், மக்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். திருச்செங்கோடு பல கோயில்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்ட வாரியத்தின் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தார்.
டி.எம்.காளியண்ணன் அரசியல் வாழ்க்கை
காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது, டி.எம். காளியண்ணன் துணைத்தலைவராக பணியாற்றினார்.
1949ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை இந்திய அரசியல் நிர்ணய சப உறுப்பினராக திறம்படி பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர்.
1952-ஆம் ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1954 முதல் 1957வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மை கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1952, 1957, 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்கள் சேவையாற்றினார்.
1967-இல் மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட காளியண்ணன், திமுக பொதுச் செயலர் க. அன்பழகனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர், 1967 முதல் 1977-ஆம் வரை சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) பதவி வகித்தார்.
1977, 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.எம். காளியண்ணன் போட்டியிட்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளை வகித்த காளியண்ணன், 2000-ஆம் ஆண்டுக்கு பின் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து படிப்படியாக விலகி கல்விப் பணியிலும், மக்கள் நலப்பணியிலும் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார்…
இன்றைய அரசியல் தலைவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணமாகத் திகழும் காளியண்ணன் இன்று தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவரது சேவையை மறக்காத அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், இன்றுவரை தேர்தல்கள் சமயத்திலும், முக்கிய நிகழ்வுகளின்போதும், அவரிடம் ஆசிகள் பெற்று செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்கியது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த டி.எம்.காளியண்ணன், அந்தக் காலத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ற இரு கட்சிகளே பிரதானமாக இருந்தன. இன்று ஏராளமான கட்சிகள் உள்ளன. இப்போது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.