சென்னை:
உள்ளாட்சி மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்து உள்ளது.
தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்து உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திமுக உள்பட சிலர், மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோவாக பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் தேவைப்படும் இடங்களில் வீடியோ பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்றும், அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யலாமே? என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில், 11 தேதி நடைபெற உள்ள தேர்தல் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்து இன்றே அறிவுறுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 21ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.