சென்னை:

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதனப்டி,  மாதவரம்-தரமணி இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கான சுரங்கம் தோண்டும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறி உள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதற்கு பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் 2வது கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 118.9 கி.மீ. தொலைவில் ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதன் மதப்பு  ரூ. 85 ஆயிரத்து 47 கோடி. இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாகஅதிகாரி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கான டெண்டர்கள் விரைவில் இறுதிச் செய்யப்படும் என்றும், வரும்  ஜூன்  மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்குகிறது.  இதற்கான இயந்திரங்கள் விரைவில் சென்னைக்கு வர இருப்பதாகவும் கூறினார்.

மாதவரத்தில் இருந்து கெல்லீஸ் வரை 9 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வழித்தடத்திலும், கெல்லீசில் இருந்து தரமணி வரை 12 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு வழித்தடத்திலும் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கும் என்றும், இந்த  2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜப்பானின் சர்வதேச கார்ப்பரேசன் ஏஜென்சி நிதி உதவி வழங்குவதாகவும் தெரிவித்தார்.