கேன்பரா: வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியாவில் 10,000க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி சுட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் ஏராளமான விலங்குகள், காடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருக்கக்கூடிய நிலையில், வேறு வழியின்றி ஒட்டகங்களை சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்குள்ள பழங்குடியின நிலங்களின் தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட்டமாக நுழையும் ஒட்டகங்கள் அங்குள்ள நீரை முற்றிலும் குடித்துவிடுகின்றன என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும்.

இது குறித்து பழங்குடியின தலைவர்களில் ஒருவரான மாரிட்டா பேக்கர் கூறியிருப்பதாவது: நாங்கள் இங்கே வெப்பமான காலநிலையில் வசித்து வருகிறோம். உடல்நிலையும் வேறு சரியில்லாமல் இருக்கிறோம்.

இங்குள்ள ஒட்டகங்கள் எல்லாம் எங்கள் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. வீடுகளை சுற்றி வரும அவை, இருக்கும் தண்ணீரை முழுமையாக குடித்துச் செல்கின்றன. மேலும் உயிரிழக்கும் மற்ற உயிரினங்களினாலும் நீர் ஆதாரங்களும் மாசுபடுவதோடு, தொல்லைகளும் ஏற்படுகின்றன என்றார்.

இதையடுத்து தொடர் தொல்லை தரும் ஒட்டகங்களை கொல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது 1.2 மில்லியன் ஒட்டகங்கள் வாழ்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிகிறது.

19ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை போக்குவரத்து மற்றும் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டன.