இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் வீரர்களை, விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், மைசூரில் உள்ள உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் அவர்களுக்காக சிறப்பு உணவு மற்றும் திரவ பொருட்களை தயார் செய்துள்ளது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள டுவீட் படி, “விண்வெளி வீரர்களுக்கான மெனுவில் முட்டை ரோல்ஸ், வெஜ் ரோல்ஸ், இட்லி, மூங் டால் ஹல்வா மற்றும் வெஜ் புலாவ் ஆகியவை அடங்கும். விண்வெளி வீரர்கள் உணவு ஹீட்டர்கள் உதவியுடன், விண்வெளியில் திரவங்களை குடிக்க உதவும் வகையில் நீர் மற்றும் பழச்சாறுகளுக்கான சிறப்பு கொள்கலன்களையும் அமைச்சரகம் ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின் படி, டிசம்பர் 2021க்குள் மனிதர் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பும் இலக்கை இந்தியா பூர்த்தி செய்யும். இந்த திட்டத்தை முதன்முதலில் பிரதமர் நரேந்திர மோடி தனது 2018ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது அறிவித்திருந்தார்.
ஒரு சுற்றுப்பாதை தொகுப்பை கொண்டிருக்கும் இந்த விண்கலம், அதில் ஒரு சேவை மற்றும் குழுவுக்கான தொகுப்பையும் கொண்டிருக்கும். இந்த பணிக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவ்வீரர்களுக்கு ரஷ்யாவில் இந்த ஆண்டு ஜனவரியின் மூன்றாவது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.