டெல்லி: தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களே மருத்துவப்படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

பல மாநிலங்களில் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக தமிழகம் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந் நிலையில் நீட்தோ்வுக்கு  நாடு முழுவதும் 16 லட்சம் போ் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவற்றில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு மே 3ம் தேதி நடக்கிறது.

அதற்கான விண்ணப்பப் பதிவு டிசம்பா் 2ம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் இப்போது முடிந்துவிட்டது.

கடந்த ஆண்டில் 14  லட்சம் பேர் நீட் தோ்வை எதிர்கொண்டனர். அவர்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1.23 லட்சம் போ் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785  போ் தான் தோ்வாகினர். தமிழுடன் சேர்த்து மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வை மாணவர்கள் எழுதினர்.