ராஞ்சி: ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்எல்ஏக்கள் பண்டு டிர்கி மற்றும் பிரதீப் யாதவ் இருவரும் காங்கிரசில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி அமைய காரணமாக இருந்தவர்கள் பண்டு டிர்கி மற்றும் பிரதீப் யாதவ். நடப்பு தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்ற பின்னரும் தொடர்ந்து காங்கிரஸ் முகாமின் தொடர்பில் இருந்து வந்தனர்.
இந் நிலையில் இருவரும் காங்கிரசில் தங்களை இணைத்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்பிஎன் சிங்கை அவர்கள் சந்தித்து உள்ளனர். அதே நேரத்தில் காங். துணை பொறுப்பாளர் உமங் சிங்காரும் தொடர்பில் இருக்கிறார்.
ஆனால், உண்மையான நிலவரம் என்ன என்பதை இருவரும் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் காங்கிரசில் சேருவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் உண்மையானால் இருவரையும் வரவேற்க காங்கிரசானது தயாராகவே இருக்கிறது. இருவரும் காங்கிரசில் சேர்ந்தால் மாநிலத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக உயரும். அப்படி ஒருவளை நடக்கும் பட்சத்தில் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் இந்த எண்ணிக்கை கைகொடுக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.