டெல்லி: டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருக்கிறார்.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மியின் அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றார்.
சட்டசபை பதவிக்காலம் பிப்ரவரி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அங்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா பிப்.8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: டெல்லி சட்டசபைக் தேர்தல் குறித்து 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் பணிக்காக 90,000 அலுவலர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
மொத்தம் 13,000 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். 70 தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
வேட்புமனுத் தாக்கல் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜனவரி 21 ஆகும். பிப்ரவரி 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன என்றார்.