புதுடெல்லி: ரூபாய் நோட்டுகளை பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடுடையவர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையிலான ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி இயக்குநர் சக்திகாந்த தாஸ் இதை அறிமுகம் செய்தார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள அந்த செயலியின் பெயர் ‘MANI’ என்பதாகும். அதாவது, Mobile Aid Note Identifier என்பதாகும். இந்த செயலியின் சிறப்பம்சம், இணைய வசதியில்லாதபோதும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன்மூலம், பார்வைக் குறைபாடு கொண்ட மற்றும் பார்வையற்றோர் ரூபாய் நோட்டுக்களை எளிதாக அடையாளம் காண முடியும்.
அதாவது, ரூபாய் நோட்டை மொபைல் கேமராவின் மூலமாக ஸ்கேன் செய்தால், அது எவ்வளவு ரூபாய் என்பதை அறிவித்துவிடும் இந்த செயலி. இந்த செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் வசதியுள்ள எந்த மொபைலிலும் பயன்படுத்தலாம்.
ஆனால், நோட்டை அடையாளம் காண்பதற்கு மட்டும்தான் இந்த செயலியே தவிர, ஒரு நோட்டு கள்ள நோட்டா? அல்லது நல்ல நோட்டா? என்று இதன்மூலம் அடையாளம் காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.