கொல்கத்தா: சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்து, குடிமகனாக நிரூபிக்க வேண்டும் என்பது அவமானம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம் பொங்க கூறியிருக்கிறார்.
சிலிகுரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
வேலையில்லா திண்டாட்டம், பசிக்கொடுமை என்று பேசினால் உடனே பாகிஸ்தான் போங்கள் என்று கூறுவார்கள். உரிமைகளை அவர்கள் (பாஜக) எடுத்துக் கொள்வதற்கு நான் விடமாட்டேன்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து, நமது இந்த நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டியது அவமானம். இந்தியா மிகப்பெரிய நாடு. இதற்கு என்று வழமையான கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது.
அப்படி இருக்கையில், எப்பொழுதுமே ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறார்கள்? நீங்கள் இந்திய பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? எந்த பிரச்னை என்றாலும் பாகிஸ்தானை ஏன் புகழ்கிறீர்கள்?
இந்தியாவை பற்றி மறந்துவிட்டீர்களா? அதனால் தான் பாகிஸ்தான் பற்றி பேசுகிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.